தங்கையன் ஒரு பலூன் வியாபாரி…

பெரிய கோவில் திருவிழா கோலகலமாக நடந்துக்கொண்டு இருந்தது. பெரிய கோவில் என்றால் தஞ்சாவூர் பெரியகோவில் கிடையாது. மன்னார்குடியில் உள்ள பெருமாள் கோவில் . வட்டார ஜனங்களால் இது பலகாலமாக பெரிய கோவில் என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது.

யானைக்கால் மண்டபம் சாமி புறப்பாடுக்கு தயாராகும் முன்பே தங்கையன் அங்கே இருந்தாக வேண்டும். இல்லையன்றால் பலூன் கடை போட இடம் இருக்காது. இன்று சூரிய பிரபை வேறு.. இன்று கடையை சீக்கிரம் போட்டால்தான் நல்ல காசு பார்க்க முடியும்.

பலூன் கட்டி தொங்கவிடும் அந்த கம்பியை எடுத்துக்கொண்டு மகன் வேலுவையும் கூட அழைத்து சென்றார். வேலு கையில் ஒரு பை வைத்திருந்தான். அதில் காற்று நிரப்பபடாத பலூன்கள், காற்று நிரப்பும் பை, காசுகளை போட்டு வைக்க ஒரு பெட்டி ஆகியவை இருந்தன. எல்லாம் அப்போதுதான் புதிதாக வாங்கிய பலூன்கள் அவற்றை வேலு முகர்ந்து பார்த்தான். அந்த பலூன் வாசனை அவனுக்கு மிகவும் பிடித்து போனது.

வேலு குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி அளிக்க கட்டப்பட்டுள்ள மணிமேகலை அரசு பள்ளியில் படித்து வருகிறான். கணக்கில் அவன் கெட்டிகாரன். இதனாலேயே கூட்ட நெரிசலான காலத்தில் பணத்தை எண்ண பாக்கி கொடுக்க போன்ற உயர் ரக பணிகளுக்கு வேலுவை வைத்துக்கொள்வது வழக்கம்.

சீக்கிரம் யானைக்கால் மண்டபத்தை அடைய வேண்டும் என வேகமாக நடந்தார் தங்கையன். அவரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக வந்தான் வேலு. வேலுவின் உடை அலங்காரத்தை ஒரு நொடி தங்கையன் பார்த்தார். வேலு தந்தையை போல அசுத்தமான உடைகளை அணிவதை அவ்வளவாக விரும்ப மாட்டான். ஐந்தாவது தான் படிக்கிறான் என்றாலும் முடிந்த அளவு நல்லப்படியாக உடைகள் உடுத்துவான். அவனது செய்கைகள் சில சமயம் தங்கையனுக்கு பயத்தை ஏற்படுத்தும். இவன் தகுதிக்கு மீறிய பணக்கார ஆசைகளை கொண்டுள்ளானோ என்கிற எண்ணம் அவருக்கு. ஞாயிற்றுக்கிழமைகளில் பக்கத்து தெருவில் குற குடிசை சிறுவர் சிறுமிகள் திண்பண்டங்களுக்காக பிச்சை எடுப்பது வழக்கம். வேலு அதற்கும் போகமாட்டான். ஏன் என்று கேட்டால்

“ இப்படி இருந்தா நம்மள யாரும் மதிக்க மாட்டாங்க” என்று வீராவேசமாக பேசிவிட்டு சென்றுவிடுவான். இவையெல்லாம் தங்கையன் மனதிற்குள் ஓடிக்கொண்டது. எப்படி இருந்தாலும் தன் மகன் கெட்டிகாரன் அவன் ஒரு ஜில்லா கலெக்டர் கூட ஆகலாம் யார் கண்டது ? மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டார் தங்கையன். அப்படி அவனை ஆக்குவது அவருக்கும் மறைமுக லட்சியமாக இருந்தது.

இப்படியாக யானைக்கால் மண்டபமும் வந்தது. விழா ஆரம்பிக்க போவது இரவு 7 மணிக்குதான் , தங்கையன் 5 மணிக்கே வந்ததால் கடைகள் நிறைய வரவில்லை. தங்கையன் பலூன் கட்டும் கம்பியை தான் வழக்கமாக பலூன் விற்கும் இடத்தில் கொண்டு போய் வைத்தார். ஐந்தாறு போலிஸ்களும், பழ வண்டிகளும் நின்றுக்கொண்டிருந்தன. வேலு சுற்றும் முற்றும் பார்த்தான் மண்டபத்தில் திரை சீலை போட்டிருந்தது. உள்ளே ஒரு சில பிராமணர்கள் சாமிக்கு அலங்காரம் செய்துக்கொண்டிருந்தனர். வெளியே சாமியை பெரிய கோவிலுக்கு அழைத்து போக வைத்துள்ள பல்லக்குக்கு அலங்காரம் நடந்துக்கொண்டு இருந்தது.

பக்கத்தில் பழக்கடை இருந்தது. அதில் மாங்காய் கீற்றுக்களை பார்த்ததும் வேலுவிற்கு நாவில் எச்சி ஊற தொடங்கியது. தன் தந்தையை பார்த்தான். அவர் கம்பிகளை பலூன் கட்ட தயார் செய்துக்கொண்டிருந்தார்.

“அப்பா காசு வச்சிருக்கியா” என்றான் வேலு.

“என்னடா இன்னும் போனியே ஆகல. அதுக்குள்ள காசு கேக்குற”

“இல்ல ஒரு ரூபாய் குடுவேன். மாங்கா வாங்க”

“சரி மாங்கா வாங்கி தாரேன், ஆனா நீதான் பலூனுக்கு காத்தடிக்கணும், என்னாங்குற”

சரி என தலையசைத்தான் வேலு. உடனே கையில் வைத்திருந்த சுருக்கு பையில் இருந்து ஒரு ரூபாயை கொடுத்தார் தங்கையன்.

அந்த பழக்கடைக்கு ஓடினான் வேலு. பழக்கடைக்காரர் எப்போதும் மணிமேகலை பள்ளி வாசலில் மாங்காய் விறப்பவர்தான் அதனால் அவருக்கு ஏற்கனவே வேலுவை தெரியும். வேலு ஓடி வந்து தள்ளு வண்டி அருகே நின்றான்.

“வாடா வேலு என்ன திருவிழா பாக்க வந்தியா ?”

“இல்ல அப்பா கூட வந்தேன்”

“அப்பா எங்கடா?”

“அதோ” என்று பலூன் கடையை காட்டினான்.

“ஏண்டா படிக்கிற பையனா இருந்துக்கிட்டு அப்பா கூட பலூன் விக்க வரலாமா ?” என்றார் பழக்கடைக்காரர்.

“இல்லை நான் பலூன் விக்க மாட்டேன். காசு மட்டும் எண்ணி குடுப்பேன். அப்பாவுக்கு அவ்ளோவுக்கு கணக்கு தெரியாது”

“அப்பாவுக்கே உன் உதவி இருந்தாதான் வியாபாரம் ஆகும் போல. சரி என்ன வேணும். இங்க ஒடியாந்தியே?”

“அதுவா ஒரு ரூபாய்க்கு மாங்காய் கீத்து கொடுங்க அண்ணே”

எல்லோருக்கும் ஒரு ரூபாய்க்கு ஒரு கீற்று கொடுக்கும் வியாபாரி வேலுவுக்கு கொசுறாக ஒரு சின்ன கீற்றையும் சேர்த்து வைத்துக்கொடுத்தார். அங்கே இருந்த உப்பு மிளகாய்த்தூள் கலவையை கொஞ்சமாக எடுத்துக்கொண்டு அப்பாவை நோக்கி ஓடினான் வேலு. சின்ன கீற்றை அப்பாவிடம் கொடுத்துவிட்டு பெரிய கீற்றை உப்பு மிளகாய் தூளில் தேய்த்து மாங்காயை தின்று முடித்தான் வேலு.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பலூன்கள் அனைத்தும் கட்டப்பட்டன. பலூன்கள் மட்டுமன்றி காற்று நிரப்பப்பட்ட குதிரை பொம்மைகள் போன்றவையும் அதில் இருந்தன. தங்கையன் வைத்திருந்த மொத்த காசுகளையும் கொண்டு பலூன் வாங்கிவிட்டதால் திருவிழாவையே மலைப்போல நம்பி இருந்தார்.

மணி ஆறு ஆகியிருந்தது. இதற்குள் ஐந்து வியாபாரம் நடந்து இருந்தது. இப்போது கடைகள் அதிகமாகி இருந்தன. பொம்மை கடைகள் வந்திருந்தன. ஜவ்வுமிட்டாய் கடைகளும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தன.

பெரிய கோவில் திருவிழா என்றாலே ஜவ்வு மிட்டாய்க்கு தனி மவுசு உண்டு. பெரிய கோவில் திருவிழா சமயத்தில் மட்டுமே இந்த ஜவ்வு மிட்டாய்கள் கிடைக்கும் என்பதால் இதற்கு தனி மார்க்கெட் உண்டு.

வேலு திருவிழாவில் உள்ள வண்ண விளக்குகளையும், தயாராக இருக்கும் வானவேடிக்கைகளையும் வேடிக்கை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான். ஆறு மணிக்கு மேல் அதிகமாக தொடங்கிய கூட்டம் ஏழு மணியை அடையும் போது வழுவாக இருந்தது.

கட்டிய பலூனில் 20 பலூன்கள் விற்று இருந்தன. வேலுவும் தங்கையனும் அடுத்த பலூன்களை காற்று நிரப்பி கட்டினர். 7 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் சூடு பிடிக்க துவங்கியது. இப்போது அனைத்து வியாபாரிகளும் பெரிய ஜன நெருக்கடிக்கு ஓரமாக நின்றுக்கொண்டிருந்தனர்.

சாமி கிளம்பியதும் யானைக்கால் மண்டபத்தில் இருந்து தங்கையனும் சாமியின் பல்லக்கு பின்னாடியே பலூன் விற்றுக்கொண்டு சென்றார்

பலூன் கணக்கு வழக்குகளை சரியாக பார்த்து வேலு பணத்தை பெட்டியில் போட்டு வைத்தான். மணி 8 ஆகும்போது முக்கால்வாசி பலூன்கள் விற்று இருந்தது. தங்கையன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். போட்ட காசுக்கு இரட்டிப்பாக கிடைத்து இருந்தது. வேலுவுக்கு பால்கோவாவும் சர்பத்தும் வாங்கிக் கொடுத்தார். அவனும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். சூரிய பிரபை என்பது குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் கொண்டாடும் நாளாகும்.

எனவே அவர்கள் வான வேடிக்கை வெடிகளை போட அனைத்தையும் தயார் செய்து இருந்தனர். எட்டு மணி வாக்கில் அவர்கள் வெடியை போட துவங்கினர். வான வேடிக்கைகளை பார்த்ததும் வேலுவும் தங்கையனும் வெகு நேரத்திற்கு வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஏனெனில் வான வேடிக்கை தொடர்ந்து வெடித்துக்கொண்டிருந்தது. மேலேயே பார்த்துக்கொண்டிருந்த தங்கையன் கீழே பார்க்காமல் தவறுதலாக யார் மேலோ இடித்துவிட்டார். யாரையோ இடித்துவிட்டோமே என அவர் சுதாரிப்பதற்க்குள் பலேர் என ஒரு அறை கன்னத்தில் விழுந்தது. அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் தங்கையன் அந்த நபரை கண்டான். அவரது கையில் இரண்டு நிற கயிறு கட்டப்பட்டிருந்தது.

அந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான் தற்சமயம் இந்த திருவிழாவில் சிறப்பு பங்கு ஆற்றி வருகின்றனர்.

அதே சமயம் பக்கத்து கடையில் வீட்டுக்கு இனிப்புகள் வாங்கி கொண்டிருந்த வேலுவும் இந்த காட்சியை கண்டான். அந்த அடித்த மனிதனுக்கு பக்கத்தில் இருந்த மனிதன் அவனிடம் வந்து “என்ன மாப்ள என்னடா ஆச்சி” என்றான்.

“இந்த குற பரதேசி. என் மேல இடிச்சிப்புட்டான்டா” என்றான் அவன்.

இதை கேட்டுக்கொண்டிருந்த மனிதனும் மற்றவர்களும் இணைந்து தங்கையனின் பலூன்களை நாசமாக்கி அவரையும் போட்டு மிதித்தனர். வலி தாங்காத தங்கையன் வீறிட்டு கத்தினார். அவரின் கத்தல் மட்டுமே வேலுவுக்கு கேட்டது கூட்டத்தில் அவனுக்கு வேறு எதுவும் தெரியவில்லை.

அவர்கள் தங்கள் தந்தையை கொன்று விட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு அங்கேயே அழ துவங்கினான் வேலு. சிறிது நேரம் கழித்து அந்த மேல் சாதிய கூட்டம் நகர்ந்தது.

இப்போதுதான் வேலுவுக்கு உணர்வே வந்தது. அவன் வேகமாக ஓடி அவனது தந்தையை பார்த்தான். மூக்கு முகங்களில் எல்லாம் ரத்தம் சிந்த மயக்கத்தில் கிடந்தார் தங்கையன். அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு அரை நிர்வாணத்தில் கிடந்தார்.

அவரது பலூன்கள் நாசம் செய்யப்பட்டிருந்தன. பலூன் விற்க வைத்திருந்த பிரேத்தியேக கம்பி நெழிந்து கிடந்தது. பணப்பெட்டியில் பணமும் இல்லை. வெறும் பெட்டி மட்டும் கிடந்தது. இந்த காட்சியை பார்த்து அழுதுக்கொண்ட ஓடிய வேலு. சிறிது தண்ணீரை கொண்டு வந்து தனது தந்தையின் முகத்தில் தெளித்து எழுப்பினான்.

மெதுவாக கண் விழித்தார் தங்கையன். தனது மகன் விம்மி விம்மி அழுதுக்கொண்டிருந்ததை கண்டார் தங்கையன்.. அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு அவரும் அழ தொடங்கினார். அழுகையும் துயரமும் தன் சமுதாயத்திற்கு விதிக்கப்பட்ட சாபக்கேடு என்பதை அறிந்தவர்தான் தங்கையன். ஆனால் தன் மகன் முன்பு இப்படி அடிப்பட்டு அரை நிர்வாணமாய் கிடந்தது அவரை வெட்கி தலைக்குனிய செய்தது.

தங்கையன் அழுகையை நிறுத்திவிட்டு மகனை ஆறுதல் செய்ய முயன்றார்.

“டேய் நீ ஏண்டா அழுகுற… நீ பெரிய ஆளா வர போரவண்டா… இந்த கஷ்ட்டத்துக்கே அழுவுற. அழுவாத கண்ணை துடைச்சுக்க” என்றார்.

இருவரும் எழுந்தனர். அனைத்து பொருட்களையும் தங்கையன் எடுத்துக்கொண்டார். பணப்பெட்டியில் பணம் இல்லாததை பார்த்ததும் அவருக்கு அழுகை வந்தது. ஆனால் மகனுக்காக அழுகையை அடக்கி கொண்டார். மணி ஒன்பது ஆகி இருந்தது.

இவர்கள் கஷ்ட்டத்தையெல்லாம் காணாமல் சாமியும் பக்தர்களும் வெகுத்தொலைவு சென்றிருந்தனர். ஏதோ ஒரு புள்ளிப்போல் அங்கிருந்து சாமி தெரிந்தது. அந்த சாலையே வெறிச்சோடி கிடந்தது. ஒரு உணவகமும் சில கடைகளும் , ஒரு மஞ்சள் தெருவிளக்கின் வெளிச்சமும் மட்டுமே அந்த தெருவில் இருந்தது. இருவரும் வீட்டை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் எதுவுமே பேசவில்லை. சிறிது தூரம் சென்றதும் அந்த நெஞ்சை துளைக்கும் கேள்வியை வேலு கேட்டான்.

“அப்பா நீ ஏம்பா அவங்கள திருப்பி அடிக்கல?” என்றான்.

தங்கையன் நடுங்கி போய்விட்டான். மனதால் அவர்களை கொலை செய்யுமளவு கோபம் இருந்தாலும் அதை வெளியே சொல்வதற்கே தங்கையன் பயப்படுவார். அவர் வேலுவை அழைத்து வந்ததே பெரும் தவறு என நினைத்தார். வேலுவை சாந்தப்படுத்த நினைத்தார்.

“அவங்களை எல்லாம் அந்த ராஜ கோபால சாமி பாத்துக்கும் ராசா விடு” என்றார்.

“எங்க பாத்திச்சி சாமி சும்மாதான இருந்துச்சி.” மிகவும் ஆவேசமாக பேசினான் வேலு. “நான் வளர்ந்து அவங்கள கொன்னுடுறேன் அப்பா”

அந்த பிஞ்சு மனதில் தன் தந்தையை தாக்கியவர்கள் மீது இப்படி ஒரு வன்மம் வரும் என தங்கையன் நினைக்கவே இல்லை. இனி வேலுவிடம் சில விஷயங்களை பேசுவது நல்லது என அவர் நினைத்தார்.

“வேலு நீ சின்ன புள்ளடா. ஒண்ணு தெரிஞ்சிக்கோ நாம பிறக்கும்போதே இந்த பூமியில கஷ்ட்டப்படணும்னு தலையில எழுதி பொறந்த சாதிடா. அவங்களுக்கு பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் தெரியும். அவங்க எல்லாருமே கொலைக்காரங்க டா. ஏற்கனவே பல பேர கொன்னு இருப்பாங்க”

அதிர்ச்சியாக பார்த்தான் வேலு. தங்கையன் மேலும் தொடர்ந்தார்.

“ நீ அவங்களை எதாவது பண்ணனும்னு நினைச்சாலே அவங்க நம்ம சாதி சனத்தையே இல்லாம பண்ணிடுவாங்க வேலு”

“அப்ப அவங்கள ஒண்ணுமே செய்ய முடியாதா?”

“வேலு முதல்ல ஒண்ணு புரிஞ்சிக்க. ஒரு உசிர எடுக்குறதுக்கு இங்க யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி எடுப்பணு நீ நின்னாக்க உனக்கும் அவங்களுக்கு என்னடா வித்தியாசம்”.

“அப்ப என்னதான் பண்ணனும்னு சொல்றீங்க. சும்மா இருக்கவா?” கோபமாக கேட்டான் வேலு.

“கண்ணா. நீ நல்லப்படியா ட்ரெஸ் போடுறத பார்த்து நம்ம சாதி பசங்க நாலு பேரு நல்ல ட்ரெஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க. எப்போதும் உன்ன மாதிரி சுத்தமா இருக்காங்க.இப்படி நீ மத்தவங்களுக்கு எடுத்துக்கட்டா இருக்கணும். நீ நல்லா படி. பெரும் படிப்பு எல்லாம் படி, படிச்சி பெரிய ஆளாகி நம்ம சமூகத்துல உள்ள எல்லாரையும் படிக்க வைச்சி பெரிய ஆளா ஆக்கு. நீ பெரிய ஆளா ஆய்ட்டினா அவங்களால உன்ன தொட முடியாது. உனக்குன்னு பத்து பேரு இருப்பான்.”

“அது எல்லாம் சரிப்பா.. அதுக்காக இதை எல்லாம் ஏத்துக்கணுமா?”

“ஆமாம் டா நீ பெரிய ஆளா ஆகுற வரை இந்த சாக்கடையா இருக்குற இடத்தில் பல பேர்க்கிட்ட அவமானம் பட்டுதான்டா ஆகணும். இவனுங்க உன்ன பெரிய ஆளா ஆக விடமாட்டானுங்க. உன்ன எப்படியாச்சும் கீழே தள்ளி விடத்தான் பாப்பாங்க. நம்ம சமூகம் மேல வர்ரது. இங்க யாருக்குமே புடிக்காது ராசா. நாம கடைசி வரை பலூன் வித்துக்கிட்டே காலத்தை கடத்தணும் னு தான் அவங்க விரும்புவாங்க.”

இந்த பேச்சுகளில் வீடு வந்தது தெரியவில்லை. கணவன் இது போல் வருவது மனைவிக்கு புதிய காட்சி அல்ல. மறுநாள் உணவுக்கு பணமில்லை என அறிந்த மனைவி அழுதாள். கணவனின் காயங்களுக்கு கட்டு போட்டார். இப்போது தங்கையன் வேலுவை அழைத்தார்.

“கண்ணா உனக்கு இரண்டு வழி இருக்குடா. ஒன்னு காலம் பூரா பலூன் வித்துக்கிட்டு இப்படி ஒரு ஈனத்தனமான வாழ்க்கையை வாழணும். இல்ல படிச்சி பெரிய ஆளாகி நம்ம சமூகத்தையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும். ஆனா படிக்கிற காலம் முழுக்க உனக்கு அவமானம் இருக்கும் அத நீ தாங்கிக்கனும். இதுல நீ எந்த வழில போக போற” என்றார் தங்கையன்.

வேகமாக வீட்டிற்குள் சென்ற வேலு தனது பாடப்புத்தகத்தில் ஆங்கிலத்தில் இருந்த பாடல் ஒன்றை எடுத்து படிக்க துவங்கினான். அவ்வளவு துன்பங்களுக்கு நடுவிலும் தனது மகனின் ஆங்கில வார்த்தைகள் தங்கையன் உதட்டில் ஒரு சிறு சிரிப்பை உதிர செய்தது.

Leave a comment

Blog at WordPress.com.

Design a site like this with WordPress.com
Get started